இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஜூன், 2012

வாழ்க்கைப் பாதை!

"நட்பு"கொடை என்ற நற்பண்புகள் சிலருக்கு கொடையாகியே விடுகின்றன" இந்த வகையில் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதர்தான் திரு,கந்தையா பசுபதி அவர்கள். நெடுந்தீவு!இது புவி வரைபில் புள்ளியிட்டுக் காட்ட முடியாத சிறு தீவாக இருந்தபோதும் பல்வேறு துறைகளில் சொல்லப்படுபவர்களாக பாரெங்கும் பரவி வாழும் மக்களை பிரசவித்த ஒரு கருவறை என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மை. இந்த நெடுந்தீவு இலங்கை நாட்டின் அமைப்பிலும்,செயலிலும் தலைபோன்று அமையப் பெற்றது. அந்த புண்ணிய மண்பாகம் தாங்கிப்பிடித்த தங்கக் குழந்தையாக 15.03.1926ல் பசுபதி அவர்கள் அவதரித்தார். கரமத்தை முருகன் அருள் மல்க வாழ்ந்த திரு,திருமதி,கந்தையா-கனகம் தம்பதிகள் ஆலயத்தொண்டிலும், சேவையிலும் சிறந்து விளங்கியவர்கள்,தெய்வகடாட்சம் பெற்றவர்களாக வாழ்ந்த குடும்பத்தினர். இவர்களது வாழ்வின் சிறப்பும்,அயலவரோடு காட்டிய அன்பும் பண்பும் அந்த சுற்றாடலில் சிறந்த நன்மதிப்பை பெற காரணமாக அமைந்ததெனலாம். இப்படியொரு வளமான வாழ்வின்போது கந்தையா தம்பதிகளுக்கு தோன்றிய செல்வங்களாகவும் திருவாளர் பசுபதி அவர்களின் சகோதரர்களாகவும் 1)அருணாசலம் 2)நாகேஷ் 3)கணபதிப்பிள்ளை 4)நாகரத்தினம் என்ற ஆண்சகோதரர்களும் 5)மாணிக்கம் 6)வள்ளியம்மை 7)பார்வதி 8)சின்னத்தங்கம் என்ற பெண்சகோதரிகளும் பிறப்பெடுத்திருந்தனர். அன்றைய ஒரு சராசரி குடும்பத்தவர் செய்ததை விடவும் மேலாக கந்தையா அவர்கள் பிள்ளைச்செல்வங்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்ததும், நேரம் தவறாத உணவும்,ஆடை அணிகலன்கள் என வலி தெரியாமல் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்.இந்தவகையில் வளர்ப்பில் எழிலும் துணிவும் நிறைந்து எல்லையற்ற துடிப்போடு பள்ளிப்பருவம் அடைந்தார் பசுபதி அவர்கள்.சற்றுக்குறும்பான குழந்தைப் பருவம் என்றபோதும் சைவப்பிரகாசா வித்தியாலயம் கதிரை தந்தது. சிறு வயதில் கல்வியில் காட்டிய நாட்டத்தினால் ஆசிரியர்களின் பாராட்டைப்பெற்றார். பின்னர் காலம் செல்ல செல்ல கவனம் திரும்பியது.காற்றில் கூட உணவு சுமந்து வரும் நெடுந்தீவின் வளத்திற்கு படிப்பு ஒரு கேடா என பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார் ஆனாலும் கதைப் புத்தகங்கள்,நாளாந்த தினசரிகள் என்பவற்றை வாசிப்பதிலும்,உலக நடப்புக்களை அறிவதிலும் இறுதிக்கணம்வரை ஆர்வமுடன் இருந்து வந்தவர். கண்டிப்பு என்பது பிள்ளைகளை துன்பப்படுத்தும் என சிந்திக்கும் அரிய அப்பா கந்தையா அமையப்பெற்றதால் சிறுவனாக இருந்த பசுபதிக்கு அவரது எண்ணங்களே சித்தியாகின. செம்மையான இளைஞராகினார். இவரை நோக்கி எறிந்த கண்கணைகள் எண்ணற்றவை இருந்தும் வரிந்துகொண்ட கண்களோ அக்கால அழகுச்சிலை கனகம்மாவிற்கே சொந்தமாகியது.மணவாழ்வில் பார்ப்போர் கண் பட்டுவிடும் படியான அரவணைப்பும் அன்பும் அள்ளிச்சொரிந்தார்.மனைவியுடன் சினிமா, கோவில்,கொண்டாட்டம் என சுற்றித்திரிந்தனர். கைப்பிடித்த நாளிலிருந்து சிறந்த கணவனாக திகழ்ந்தார்,அன்னியோன்னியமான அவர்களது குடும்ப வாழ்வின் எடுத்துக்காட்டாக அரசரெத்தினம் சரோஜாதேவி வசந்தகுமார் யோகாதேவி விமலாதேவி இந்திராதேவி ஜெயக்குமார் இரவீந்திரகுமார் என எட்டு செல்வங்களைப் பெற்றெடுத்தனர். அலுக்காத சேவையாளன்,காலம் கருதாத உதவியாளன்,தீமைகளை தட்டிக்கேட்கும் போர்க்குணாம்சமும் அவரிடம் இயல்பாகவே நிறைந்து கிடந்தது. இரவோ பகலோ,சிறியவரோ பெரியவரோ,ஏழ்மையோ பணமோ எந்த வேறுபாடும் பார்க்காத ஒரு விசித்திர மனிதனாக பசுபதி விளங்கினார். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்.அவர்களின் திருப்தியே தனது திருப்தியாக கருதியவர்.அவரது நல் உள்ளத்திற்கு ஏற்றாற்போல் மருமக்களும் அமைந்தனர் தவமலர்(சுருவில்) இலங்கநாதன்(சுன்னாகம்) ரோகினி(அனலைதீவு) சண்முகலிங்கம்(நெடுந்தீவு) புவனேந்திரன்(வேலணை) உதயகுமார்(கரம்பொன்) புஷ்பலதா(நெடுந்தீவு) ஜெசுதா(சுழிபுரம்) ஆகிய மருமக்களுடன் பேரப்பிள்ளைகளையும் கண்டு சிறப்புடன் வாழ்ந்தவர். நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் தனது வாழ்விடமான புளியங்கூடலையும் அதிகம் நேசித்தவர்,அந்த மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்,மூலிகை மூலம் சிறு சிறு நோய்களை குணப்படுத்துவதில் சிறந்த ஆற்றல் பெற்றிருந்த அவர் இலவசமாகவே அந்த சேவையையும் செய்து வந்தவர். "உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தோர் உள்ளத்துளெல்லாம் உளன்" எனும் குறட்பா கூறுவது போல எல்லோரது உள்ளத்திலும் இடம் பிடித்தவர். பிறரை மதிக்கும் பண்பை நாமெல்லாம் கற்றதே இவரிடமிருந்துதான் எனலாம் அத்தகைய பண்பாளர்.இந்த மனித மாணிக்கம் 30.06.2009 அன்று எம்மை விட்டுப்பிரிந்தார் என்றபோதும், உள்ளத்தால் எம்முடன் இன்றும் என்றும் வாழ்வார்,வாழ்கிறார் என்பதே உண்மையாகும். ஓம் சாந்தி! ஆசிரியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக