இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 நவம்பர், 2017

இரண்டாம் ஆண்டு நினைவுகள்!

இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்ததே அம்மா!
மனத்துயர் இன்னும் ஓயாமல் அடிக்குதே அம்மா!
ஸ்கைப்பில் வந்து கதைத்த நினைவுகள் 
நகைச்சுவையோடு சிரித்த பொழுதுகள் 
சுவிஸ்,ஜெர்மனி வந்து திரும்பிய மீட்டல்கள்
எல்லாம் இன்றுபோல் இருக்கிறது அம்மா!
போலிகள் உலகம் அம்மா!
உலகமே போலி அம்மா!
உடல் கூட போலி அம்மா!
வாழ்க்கையும் போலி அம்மா!
கனவுகள் போலே எல்லாம் கலைந்து 
போனதே அம்மா!
ஆறுதல் தேட தந்தையும் இல்லை! 
தேடி அழைக்க அன்னையும் இல்லை!
பாசத்தை கொட்ட இருவரும் இல்லை!
எப்படித்தானோ நினைவை மறப்பது?
காவியம் தானே எந்தனுக்கு நீங்கள்!
காலத்தால் அழிய விடாது பொக்கிஷமாய் 
காப்பேன் உங்கள் வரலாறுதனை!
(எமது தாயார் திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் 04.11.2015 அன்று எம்மை விட்டு பிரிந்து 04.11.2017ல் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு இது இடுகையிடப்படுகிறது)

வியாழன், 29 ஜூன், 2017

எட்டாம் ஆண்டு நினைவுகள்!

எங்களுக்கு உயிர் கொடுத்த பாசமிகு தந்தை எம்மை உடலால் பிரிந்த துயரமிகு 8ம் ஆண்டு நினைவு நாள் [30.06.2017]இன்றாகும்.அன்பாலே எம்மை கட்டுப்படுத்தியவர்,செயற்பாடுகளாலே நீதியை போதித்தவர்,பிழையை பொறுத்துக்கொள்ளாத கோபக்காரர்,எதிரியே வீடு தேடி வந்து விட்டால் வரவேற்கும் பண்பாளர்.ஒரு ஆபத்தென்றால் ஓடிவரக்கூடிய[சொந்தங்களை தவிர்த்து]நிறைய நட்புக்களை சேர்த்து வைத்திருந்தவர்.அவர் எனது தந்தை என்பதுக்கும் அப்பால் சிறந்த நட்போடும் இருந்தவர்.தொலைபேசியில் உரையாடும் போது கூட எனது மனக்கவலைகளை நான் அவரிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்வேன்,அரசியல் நிலவரங்கள்,ஊரவர்கள் பற்றியெல்லாம் பேசிக்கொள்வோம்.இன்று எட்டாண்டுகள் ஓடி மறைந்து விட்டன,ஆனாலும் கனவுகளிலும் நினைவுகளிலும் அவரது எண்ண ஓட்டங்கள்தான் நிறைந்து கிடக்கின்றது.

வெள்ளி, 4 நவம்பர், 2016

அம்மாவின் பிரிவோடு ஓராண்டு!

அம்மாவின் பிரிவோடு ஓராண்டாய் தவிக்கின்றோம்!
நினைவுகள் மிதந்து வர வகையின்றி துடிக்கின்றோம்!
என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?
வாழும் வழி முறைகள் சொன்னீர்கள் நீங்கள் அன்று!
 என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?
எங்களுக்கு போதனைகள் புத்தனாம்மா
சொல்லித் தந்தான்?
நாம் அழுத்த போதெல்லாம் காந்தியாம்மா
கண்ணீர் துடைத்தான்?
எம் பசி போக்க வள்ளலாம்மா
உணவு தந்தான்?
எமக்கு வழி காட்ட கண்ணனாம்மா
வந்து நின்றான்?
எல்லாமாகி நின்ற ஜோதியே!எம் அம்மா நீங்களன்றோ!
என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?

எங்கள் பாசமிகு தாயார் திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் எமைப்பிரிந்து இன்று (04.11.2016)ஓராண்டு நிறைவுறுகின்றதை நினைவு கூரும் முகமாக எம் சோகங்களை தாங்கி இப்பதிவு இடப்படுகிறது.

ஞாயிறு, 19 ஜூன், 2016

ஏழு ஆண்டுகள் ஆகியும் தேடுகிறோம்!

பிரிவு:30.06.2009
ஏழு ஆண்டுகள் ஆனது தந்தையே
உங்களை பிரிந்து!
ஆனாலும் துயர் போகவே இல்லை 
எங்களை பிரிந்து.
உங்கள் தலைப்பா கட்டும்,
வேஷ்ட்டி சண்டிக்கட்டும் 
புளியங்கூடல் மண்ணில் 
மிடுக்காக நீங்கள் நடந்த நடையும் 
இன்னும் எம் மனக்கண் முன் 
குலையாது நிற்கிறது.
நியாயத்தின் பக்கம் நிற்பதும் 
மனிதாபிமானத்திற்காக பேசுவதும் 
உங்கள் வாழ்க்கையில் 
இயல்பான ஒன்றாக இருந்தது.
உங்களுக்குள் எழும் கடும் 
கோபங்கள் கூட பாசத்தினால் ஏற்படும் 
உணர்வுகளாகவே இருந்தது.
எப்படிப்பட்ட பகையாளியானாலும் 
வீடு தேடி வந்து விட்டால் 
வரவேற்கும் குணம் உங்களுடையது.
பொன்,பொருளை விடவும் 
நற்குணமே சிறந்ததென வாழ்ந்த 
உங்கள் மனம் போல் இனியொரு 
மனதை காண முடியாதா என்ற 
ஏக்கத்துடனேயே தினமும் 
சுமக்கிறோம் கலையாத உங்கள் 
நினைவுகளை தந்தையே!

வியாழன், 24 டிசம்பர், 2015

அம்மாவின் நினைவுகள்!

காலச்சதியதால் இழந்தோம் எம் அம்மாவை!
ஊரோடு உறவாடி,உறவோடும் அன்பாகி
துன்பங்கள் வந்தபோதும் சளைக்காது எதிராடி,
வறுமையிலும் பிள்ளைகள் பசியறியா உணவூட்டி,
நல்ல உணர்வுதனை சேர்த்தூட்டி,வளர்த்து ஆளாக்கி,
இன்று எமை தனியாக்கி விரைந்தீர்களோ அம்மா!