இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 ஜூன், 2016

ஏழு ஆண்டுகள் ஆகியும் தேடுகிறோம்!

பிரிவு:30.06.2009
ஏழு ஆண்டுகள் ஆனது தந்தையே
உங்களை பிரிந்து!
ஆனாலும் துயர் போகவே இல்லை 
எங்களை பிரிந்து.
உங்கள் தலைப்பா கட்டும்,
வேஷ்ட்டி சண்டிக்கட்டும் 
புளியங்கூடல் மண்ணில் 
மிடுக்காக நீங்கள் நடந்த நடையும் 
இன்னும் எம் மனக்கண் முன் 
குலையாது நிற்கிறது.
நியாயத்தின் பக்கம் நிற்பதும் 
மனிதாபிமானத்திற்காக பேசுவதும் 
உங்கள் வாழ்க்கையில் 
இயல்பான ஒன்றாக இருந்தது.
உங்களுக்குள் எழும் கடும் 
கோபங்கள் கூட பாசத்தினால் ஏற்படும் 
உணர்வுகளாகவே இருந்தது.
எப்படிப்பட்ட பகையாளியானாலும் 
வீடு தேடி வந்து விட்டால் 
வரவேற்கும் குணம் உங்களுடையது.
பொன்,பொருளை விடவும் 
நற்குணமே சிறந்ததென வாழ்ந்த 
உங்கள் மனம் போல் இனியொரு 
மனதை காண முடியாதா என்ற 
ஏக்கத்துடனேயே தினமும் 
சுமக்கிறோம் கலையாத உங்கள் 
நினைவுகளை தந்தையே!

வியாழன், 24 டிசம்பர், 2015

அம்மாவின் நினைவுகள்!

காலச்சதியதால் இழந்தோம் எம் அம்மாவை!
ஊரோடு உறவாடி,உறவோடும் அன்பாகி
துன்பங்கள் வந்தபோதும் சளைக்காது எதிராடி,
வறுமையிலும் பிள்ளைகள் பசியறியா உணவூட்டி,
நல்ல உணர்வுதனை சேர்த்தூட்டி,வளர்த்து ஆளாக்கி,
இன்று எமை தனியாக்கி விரைந்தீர்களோ அம்மா!

ஞாயிறு, 29 ஜூன், 2014

ஐந்தாம் ஆண்டாக தவிக்கின்றோம்!

எங்கள் அன்புத்தந்தையே!உங்களைப் பிரிந்து ஐந்தாண்டுகள் ஆனபோதிலும் எம்மால் இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை.நீங்கள் பிரிந்து விட்டதாக எம் மனம்தனில் எண்ணவே முடியவில்லை.கந்தையா-நாகமுத்து தம்பதிகளின் இரண்டாவது மகனாக வந்துதித்த(15-03-1926)நீங்கள் நாகலிங்கம்-பார்வதி தம்பதிகளின் புதல்வியான கனகம்மாவை திருமணம் செய்து எட்டுப் பிள்ளைகளை பெற்று புளியங்கூடலில் வாழ்ந்து வந்தீர்கள்,காலம் செய்த கோலம் இடப்பெயர்வு என்ற ஒன்று வந்து எம்மை நாலா திசையிலும் பிரித்து வைத்தது.புதிய உறவுகள்,புதிய நட்புக்கள்,புதிய ஊர்கள் என வாழ்க்கையே மாறிப்போனது.ஆனாலும் ஊரும் நினைவுகளுமாகவே காலம் கடந்தோடியது.தற்காலிகமாக கொழும்பிலே வாழ்ந்து வந்த நீங்கள் பின்னர் கச்சேரியடியில் வாழ்ந்து வந்த வேளையிலே(30-06-2009)உங்கள் நினைவுடனே நாமிருக்க எம் நினைவுடனே நீங்கள் இருக்க காலன் என்ற கயவனால் பறிக்கப்பட்டீர்கள்!தந்தையே நாளும் பொழுதும் உங்கள் நினைவுடனேயே இருக்கும் எமக்கு கனவுகள் கூட நீங்கள் எம்முடன் இருப்பதாகவே வருகின்றது.நீங்கள் கொடுத்த இந்த உயிரும் உடலும் நிலைத்திருக்கும் மட்டும் உங்கள் நினைவுகளும் நிலைத்திருக்கும்.

சனி, 30 நவம்பர், 2013

உயிரே எம் பெரியண்ணா!

உயிரே எம் பெரியண்ணா!எங்கே இன்று 
நீங்களண்ணா?
வருடம் ஒன்று ஆனதே
நாங்கள் பேசித்தானண்ணா!
விதியா?இது சதியா?
ஏன்தான் எமக்கிந்த கதியண்ணா!
அன்பு என்றால் எம் அண்ணா 
என்று இருந்தோமே-இன்று 
எல்லாம் இழந்து போனோமே!
வார்த்தையில் சொல்ல முடியாது,
உங்கள் பாசம்தனை 
எழுத்தில் அடக்க முடியாது.
உங்கள் நினைவுகள் 
தோன்றும் போதெல்லாம் 
எம் சுய நினைவே இழந்து போகிறது!
அண்ணா உங்கள் பிரிவென்பது 
கனவாகிடாதோ 
என மனம் ஏங்குகிறது!
பிரிவைக்காணா பிறப்பென்றால் 
இன்னுமொரு முறை 
பிறந்திடுவோம்,
அன்பே எங்கள் வாழ்வென்று 
உலகிற்கு போதனை 
செய்திடுவோம்.
அண்ணா உங்கள் நினைவோடு 
எம் வாழ்காலம் கழியுமண்ணா!