இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 பிப்ரவரி, 2013

என் ஆத்மாவில் என்றும் நீங்கள்!

எங்கள் உயிர் அண்ணாவே,பாசத்தின் இலக்கணமே,
எங்கண்ணா சென்றீர்கள் எமை இங்கு தவிக்க விட்டு!
சின்னஞ்சிறு தம்பியாய் நானிருந்த அந்நாட்களிலே
தலை சீவி அழகாய் உடை அணிவித்து என்னை அழகுபடுத்திய
நாட்களெல்லாம் என் கண்முன்னே தெரியுதண்ணா!
கோயில் தேர்த்திருவிழாவிற்கு வருடாந்தம் ஐந்து ரூபாய் தந்ததெல்லாம்
இன்றைக்கும் கைகளிலே இருப்பதுபோல் தோன்றுதண்ணா!
பெற்றோருடன் நாம் எண்மரும் ஒரே வீட்டில் குடியிருந்த
வாழ்க்கைதான் எனக்கு பொன்வாழ்வாய் தெரியுதண்ணா!
மீண்டும் புளியங்கூடல் பதியிலே நாம் ஒன்றாக வாழ்வதற்கு
கனவு கண்டவேளையிலே தந்தை உயிர் பறித்தான் பொல்லாத காலனவன்!
வந்த துயர் ஆறுமுன்னே உங்களையும் எம்மை விட்டு
பிரித்தானே பாசமற்ற கொடுங்கோலன்!
தூரம் தூரம் இருந்தாலும் பேசிக்கொள்வோம் இணையவழி முகம் பார்த்து,
இப்போ தெரியாத இடம் தன்னில் எம் அண்ணாவை மறைத்து விட்டான் இறைவன் எனும் மாபாவி!
என் அம்மாவை பார்த்து அண்ணாவை கேட்டு அழ என்னால் முடியவில்லை!
என் சகோதரர் இடத்திலும் அண்ணாவை பற்றி சொல்லி அழ என்னால் முடியவில்லை!அண்ணி தவிக்கையிலே பிள்ளைகள் கதறையிலே
யாரிடத்தில்தான் நான் இனி அண்ணாவின் கதை பேசுவது?
குடும்பத்தில் முதற் பிள்ளையாய் வந்து எம் எழுவருக்கும் அண்ணாவாக இருந்து கண்டித்து,தண்டித்து பண்பாடுதனை புகட்டி
பாசத்தை வார்த்தைகளினூடே ஊட்டி வளர்த்த எம் அண்ணாவே
உங்களை எப்பிறப்பில் காண்போம் இனி!?
உங்கள் நினைவுகள் எம் நிழல்களாக தொடர்கிறது அண்ணா!
உங்கள் குட்டித்தம்பி நான் கூட ஒரு நாள் மறைந்து போவது நிச்சயம் ஆனாலும் உங்கள் நினைவுகள் என் ஆத்மாவில் அழியாது வாழும் அண்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக